Search This Blog

Friday 26 August 2011

வறுமை நினைப்பை ஒழிப்போம்

வாழ்வியல் நுட்பங்கள்
வறுமை நினைப்பை ஒழிப்போம்
டாக்டர் அனுராதா கிருஷ்ணன், அலை பேசி: 9842256581

என் இனிய நண்பர்களே! ஒருவர் பத்தடி பள்ளத்தில் விழுந்து விட்டார். அவர் மலை உச்சிக்கு போக விரும்புகிறார், ஆனால் பள்ளத்தாக்கை நோக்கி இறங்குகிறார். அவரை என்னவென்று கூறுவீர்கள். முட்டாள் என்றோ பைத்தியம் என்றோ கூறுவோம் அல்லவா?. நாம் பணக்காரனாக வேண்டும் என்று எண்ணம் வைத்திருப்போம், ஆனால், நாளுக்கு நாள் நாம் ஏழையாகிக் கொண்டிருப்போம். இப்பொழுது, நம்மை நாம் எப்படி அழைப்பதாம்?. புத்திசாலி என்றா?. நண்பர்களே!, நாம் பணக்காரராக வேண்டுமானால் முதலில் நாம் ஏழையாவதைத் தடுத்து நிறுத்த வேண்டும். பள்ளத்திலிருந்து தரை மட்டத்திற்கு வந்தால்தான் மலை உச்சி நோக்கி ஏற முடியும். ஆகவே அன்பர்களே!, ஏழை ஆவதை நிறுத்த வேண்டுமானால், நாம் செய்யும் எதுவெல்லாம் நம்மை ஏழை ஆக்குகிறது என்பதை தெரிந்து கொண்டு, அதை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். சரி நண்பர்களே!, மாற்றிக் கொள்வதென்றால், எதிலிருந்து எதற்கு மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுவும் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா?. இதற்கு, பணக்காரர்கள் என்ன செய்கிறார்கள், பணக்காரர் அல்லாத நாம் என்ன செய்கிறோம், என்ற வித்தியாசங்களை நாம் புரிந்து கொண்டால் போதுமானது. அந்த வித்தியாசங்களைப் பற்றி முதலில் பார்ப்போமா?

வறுமை மனோபாவம்
பணக்கார மனோபாவம்
1. கடுமையாக உழைத்தல்: கடுமையாக உழைப்பது (Hard work) தற்காலிகமானது. கடும் உழைப்பு உடலை விரைவாக தளரச்செய்து, நோயை அதிகமாக்கும். இதனால், உழைக்கும் திறன் குறையும், ஆனால் நோய்க்கு செலவு அதிகமாகும். நிலைமை மோசமாகிறது.
1. மென்மையாக உழைத்தல்: புத்தியும் உழைப்பும் சேர்ந்தால், மென்மையாக உழைப்பது (Smart work) சாத்தியம். இதன் மூலம் குறைந்த உழைப்பில் நிறைந்த பலன் பெற்று, குறைவான உடல் தேய்மானமும், நீண்ட காலத்திற்கு உயிர்ப்புடனும் வாழ முடியும்.
2. வருமான நேரம் மிகக் குறைவு: தான் உழைக்கும் நேரத்தை மட்டுமே நம்பி இருப்பதால் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 10 மணி வருமான நேரமே கிடைக்கும். இதைக் கொண்டு வாழ்க்கையை ஓட்டத்தான் முடியும்.
2. வருமான நேரம் மிக அதிகம்: பலருக்கு வேலை கொடுத்து அவர்களின் உழைப்பு நேரத்தையும் தன் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக்கொள்கிறார். இதைக்கொண்டு வாழ்க்கையை வாழ முடியும்.
3. சுயமுன்னேற்றத்திற்கு நேரம் இல்லை: நாம் காலை எழுந்து தயாராகி, வேலைக்குப் போய் வந்து, மாலைப் பொழுதை போக்கி, பின் அடுத்த நாள் வேலைக்கு புதுப்பித்துக் கொள்ள தூங்கப் போகிறோம். சுயமுன்னேற்றத்திற்கும் குடும்ப முன்னேற்றத்திற்கும் அதிக நேரம் கிடைப்பதிலலை.


3. சுயமுன்னேற்றத்திற்கு நேரம் உண்டு: பலரின்உழைப்பு நேரத்தை பயன்படுத்துவதால், மிச்சப்படும் தன் நேரத்தை சுய முன்னேற்றத்திற்கும் குடும்ப முன்னேற்றத்திற்கும் பயன்படுத்த முடிகிறது.
4. படிப்புக்கு அதிக பணம் செலவு: இலட்சிய படிப்பை முடிக்கும் வரை வரும்படி எதுவும் வருவதில்லை, இலட்சங்கள்தான் செலவு.
4. படிப்புச் செலவு மிச்சம்: மற்றவர்களுக்கு படிப்பு கொடுப்பதிலும் வருமானம், பின் அவர்களுக்கு வேலை கொடுப்பதிலும் வருமானம்.
5. படிக்க அதிக நேரம் செலவழிக்கிறோம்: முதுகலை வரை படித்து வெளிவர இருபது வருடங்களும், அனுபவம் பெற சில வருடங்களும் ஆன பின்புதான் நல்ல வேலை கிடைக்கிறது. முதலில் 25 வருடம் செலவுதான், பிறகு 35 வருடம் வாழ்க்கைச் செலவுக்கு வேலை மூலம் சம்பாத்தியம்.
5. மற்றவர் நேரத்தை வாங்குகிறார்கள்: பணத்தையும் நேரத்தையும் செலவழித்து படித்தவர்களுக்கு வேலை கொடுத்து அவர்களின் நேரத்தை முப்பது வருடங்களுக்கு குத்தகைக்கு வாங்குகிறார்கள். இதனால், பணமும், நேரமும் மிச்சம்.
6. சேமிப்பு மனோபாவம்: வருமானத்தில் ஒரு பங்கை சேமிக்க வேண்டும் என்று நம் பெற்றோர்கள் நமக்கு அறிவுறுத்துகிறார்கள் . நம் சேமிப்புக்கு கிடைக்கும் வட்டியைவிட விலைவாசி விகிதம் அதிகமாக இருப்பதால், சேமித்து பின் செலவு செய்யலாம் என்பது வெறும் கனவுதான்.
6. முதலீட்டு மனோபாவம்: பத்தை நூறாக்குவது எப்படி என்ற வித்தை தெரிந்த முதலீட்டாளர்களாக இருக்கிறார்கள். வருமானம் எப்பொழுதும் விலைவாசியைத் தாண்டியதாக இருக்கும்.
7. ஆயுள் காப்பீட்டு மனோபாவம்: நாம் இறந்த பின் காப்பீடு என்ற பெயரில் ஒரு முறை மட்டுமே வருமானம் வருவதற்கு ஆயுள் காப்பீடு சந்தாவை ஆயுளுக்கும் செலுத்துவோம்.
7. வருமான பாதுகாப்பு மனோபாவம்: இறந்த பின்பும் தன் குடும்பத்திற்கு வருமானம் தொடர்ந்து வர வேண்டும் என்று தன் உழைப்பைச் சாராத துறைகளில் வருமானம் வர வழிசெய்து வைப்பார்.
8. பொருட்களை வாங்குகிறோம்: நாம் சம்பாதிப்பதே வாழ்வதற்குத் தேவையான பொருட்களை விலை கொடுத்து வாங்கத்தான். பொருட்களை வாங்கும் வரை விலையை நாம் நிர்ணயம் செய்ய முடியாது. விலைவாசி ஏற ஏற நமக்கு கஷ்டம்தான்.
8. பொருட்களை விற்கிறார்கள்: பொருட்களை விற்பதன் மூலம் வருமானம் பார்கிறார்கள். விலையை விற்பவர்கள்தான் முடிவு செய்கிறார்கள். விலைவாசி ஏற ஏற இலாபம்தான்.
9. ஒற்றை சார் வருமானம்: நாம் எத்தனை வித வருமானம் பார்த்தாலும் அவை யாவும் நம் உழைப்பை மட்டுமே சார்ந்து இருந்தால் அது ஒற்றை சார் வருமானமாகும். நாம் மூன்று விதமான வேலைகளின் மூலம் வருமானம் வந்தாலும், நாம் நின்றால் வருமானமும் நின்றுவிடும்.
9. பல்வழி சார் வருமானம்: வருமானம் உழைப்பை மட்டுமே சார்ந்து இல்லாமல் மற்ற அமைப்புகளையும் சார்ந்து இருப்பதுதான் பல்வழி சார் வருமானமாகும். தன் உழைப்பு நின்றாலும் வருமானம் நிற்காது. உதாரணமாக, வீட்டு வாடகை வருமானமும், ரியல் எஸ்டேட் முதலீடும், நெட் ஒர்க் மார்கெட்டிங் வருமானமும் நம் உழைப்பு நின்றாலும் நிற்காது.
10. வரவுக்கு ஏற்ற செலவு: நம் செலவை வரவுக்கேற்ற அளவில் செய்வோம். விரலுக்கேற்ற வீக்கம் என்று வேதாந்தம் பேசுவோம். விலைப்பட்டியல் பார்த்துதான் பொருள் வாங்குவோம். பட்ஜட் போட்டுதான் வாழ்கையை ஓட்டுவோம்.
10. செலவுக்கு ஏற்ற வருமானம்: செலவுக்கு ஏற்ற வருமானத்தை தேடிக்கொள்வார். விருப்பத்திற்கு ஏற்ற பொருளை வாங்குவார். விலை ஒரு பொருட்டாக இருக்காது.
வறுமை நினைப்பை விடுவோம்! வறுமையை வீழ்த்துவோம்.
செல்வ மனோபவம் கொள்வோம்! செல்வச் செழிப்பு வழி செல்வோம்! .

No comments:

Post a Comment